கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மூன்றாவது முறையாக நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் இந்தமுறை போடப்படும் ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனக் கூறினார். ஊரடங்கு நீட்டிப்பு தேதி மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை, பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக ஜெனீவா, வேலூர், ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.