திருப்பூரில் போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுத்த பியூட்டி பார்லர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போலி சான்றிதழ் தயாரிப்பில் சம்பந்தம் உடைய வழக்கறிஞர் மற்றும் புரோக்கர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வருவோர்களுக்கு விண்ணம் நிரப்பித்தரும் பணியை செய்பவர் மாசானவடிவு. இவர் அங்கு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வருபர்களிடம் பேசி போலி விண்ணப்பம் தயார் செய்து கொடுக்கிறார் என்ற புகாரை அடுத்து மாசானவடிவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவினாசி சாலையில் பாரதி நகரில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் மகேஸ்வரிக்கும் இதில் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அடுத்து சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லரில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழக அரசின் கோபுர சீல், பேரூராட்சி செயல் அலுவர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவை ஆய்வாளர் உட்பட பல அரசு துறைகளின் போலி சீல்கள், போலி இறப்பு, பிறப்பு, பட்டா சான்றிதழ்கள் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டன. இது குறித்த விசாரணையில் பியூட்டி பார்லருக்கு சென்று ரூபாய் 8 ஆயிரம் கொடுத்தால் போலி சான்றிதல் மூலம் கோர்ட்டில் ஜாமின் வாங்கிவிடலாம் என வழக்கறிஞர் சுதாகரன் பலருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் வழக்கறிஞர் சேவூர் சுதாகரன் மற்றும் 3 புரோக்கர்களுக்கும் தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்
இந்த போலி சான்றிதல் மோசடியில் போலி சான்றிதழ்கள் மூலம் கோர்ட்டை ஏமாற்றி பலருக்கு ஜாமீன் பெற்றுதந்துள்ளனர் என்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.