தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கையிருப்பில் இருந்த கரோனா தடுப்பூசிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகின. தற்போது கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், நாளை தடுப்பூசிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கரோனா தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசிப் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதேபோல், மற்ற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சென்னையில் இன்று (31/05/2021) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் கரோனா தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டிய நிலையில், 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன" என்றார்.
இந்த நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று (31/05/2021) பிற்பகல் 03.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்திற்குத் தர வேண்டிய கரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க தமிழக அரசு வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.