கோடைக் காலத்தில் தமிழகத்தில் வெப்ப அலை வீசுவது வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அச்சமயத்தில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெப்ப அலை பேரிடர் மூலம் மரணங்கள் ஏற்பாடு சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், “வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் குடிநீர் வழங்கப் பேரிடர் நிதியைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதிக அளவு பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.