Published on 27/06/2020 | Edited on 27/06/2020

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவுக்கு, ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுநாள்வரை மருத்துவர், தூய்மைப் பணியாளர், போலீஸ் என முன்வரிசையில் நின்று களப் பணியாற்றுபவர்களை கரோனா உயிர்ப்பலி வாங்கியது. ஆறுதல் அளிக்கும் விதமாக தொற்றுக்கு ஆளான பலர் அதில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்.
இந்நிலையில், ஊடகத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வேல்முருகன் கரோனாவுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (27/06/2020) அதிகாலை 03.00 மணிக்கு அவர் உயிரிழந்தார்.