சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைத்த வசதிகளைக் கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் தமிழக அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறைக் கடைகள் அமைந்தன.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறு கடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
இத்தகைய சூழலில் தான் சென்னை மாநகராட்சியில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ.280.85 கோடி மதிப்பீட்டில் கொள்கை ரீதியிலான நிர்வாக அனுமதியை வழங்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த ஆண்டு ஆணையிட்டது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு, பேருந்து நிலைய திட்டப் பகுதிக்குப் பற்றாக்குறை நிதியாக ரூ. 200.84 கோடி வழங்கும். நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காகப் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.115.03 கோடியை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் திருப்பி செலுத்தத் தொடங்கத்தக்க வகையிலான சலுகைக் கடனாக, சென்னை பெருநகர வளர்ச்சி முகமை வழங்கும்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.506.83 கோடியை, காலம் சார்ந்த கடனாகத் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வழங்கும். இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம், 2 அடுக்கு பேஸ்மெண்ட் அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1,100 ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.