தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த உத்தரவின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள கோவி. செழியன், ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய 4 பேரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதோடு தமிழக அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகளும் மாற்றப்பட்டன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8ஆம் தேதி (08.10.2024) அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.