![tn assembly election special bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/5uIHnCaXJeOGJxNEUYF2T4TvcAaIaoD0DSOATh551EU/1616511345/sites/default/files/inline-images/buses%2033.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் நாளான ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று, தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 3,090 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். தேர்தல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்ப ஏப்ரல் 6, 7- ஆம் தேதிகளில் தினமும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கும், கோவை மாவட்டத்திற்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கும் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.