தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (05/02/2021) தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "தி.மு.க. என்ன சொன்னதோ, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்துவருகிறார் தமிழக முதல்வர். தேர்தல் சுயநலத்திற்காக பயிர்க் கடனை ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். நீட் தேர்வில் நாடகம் நடத்தியதைப் போல் ஏழு பேர் விடுதலையிலும் நாடகம் நடத்தியுள்ளார் முதல்வர். ஏழு பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்ததை மறைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. மத்திய அரசுக்கு ஆளுநர் முடிவைத் தெரிவித்த பிறகு டெல்லி சென்றார் முதல்வர். ஊழல், விலைவாசியில் தமிழகத்தை வளர்த்துக் கொண்டு வருவதுதான் ஈ.பி.எஸ்.சின் சாதனை.
தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. விவசாய வருமானம் இந்த ஆட்சியில் உயரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் எதிலும் தமிழகம் வளரவில்லை. நாங்கள் சொல்ல வருவதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவராக அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளார். சொன்னால், ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் மனுக்களை அளித்து வருகிறார்கள். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., கடம்பூர் ராஜு கடமை தவறியதால்தான் மக்கள் என்னை நோக்கி வந்துள்ளனர்" என்றார்.