சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 19- ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாளே அவருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. கரோனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் மார்ச் 21- ஆம் தேதி, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அதில், கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அழகாபுரம் மோகன்ராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, அவருடைய வாக்கு சேகரிப்பு பணிகள் அடுத்த 5 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தெரிவித்துள்ளது. அதேநேரம், அவருக்காக தே.மு.தி.க., அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ., ஓவைசி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் தொடர்கின்றனர்.
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், எல்கே.சுதீஷ் ஆகியோரும் அழகாபுரம் மோகன்ராஜூக்கு வாக்கு சேகரிக்க அடுத்த சில நாள்களில் சேலம் வருகின்றனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் மார்ச் 25- ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மற்றும் பொன்ராஜ் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாவது வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.