தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (19/03/2021) நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று (20/03/2021) தொடங்கியது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 7,236 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அரசியல், சுயேச்சை வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில், தற்போதுவரை 1,605 வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் 2,521 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்த தகவல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
வேட்பு மனுவை வாபஸ் பெற மார்ச் 22- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.