கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் விவாதம் தொடர்ந்தது. அதில் கரோனா தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "கரோனா உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது; கரோனாவால் கர்நாடகா, தெலங்கானாவில் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவாமல் தடுக்க அண்டை மாநில முதல்வர்களுடன் முதல்வர் பழனிசாமி பேச வேண்டும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தைக் கூட்டி சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த நிலையில் அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என்று கூறினார்.
முன்னதாக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு கரோனா அறிகுறி இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடந்தது.