
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவராக உள்ளார்.
கடந்த ஆட்சியின் போது 15 வருடங்களுக்கு முன்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியைக் கொண்டு வந்தார். அதன் பின்னர் இம்முறை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ரூ.100 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பாக சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட சிவனாகியபுரத்தில் கூட்டுறவு அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி கொண்டுவந்தவுடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதி மாணவர்கள் நலன் கருதி ரெட்டியர்சத்திரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்தார்.

ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பல பொறியியல் மாணவர்கள் நலன் கருதி சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைட்டல் பார்க்(மென்பொருள் பூங்கா) கொண்டுவர உள்ளார். இது சம்பந்தமாக நேற்று அமைச்சர் ஐ.பெரிய சாமி இடத்தை பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் அவர்களுடன் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டதோடு டைட்டல் பார்க் வருவதற்கான வழி, உட்பட அனைத்தையும் கேட்டறிந்தார். பின்னர் அதனருகே ரூ.150 கோடி மதிப்பில் தொழிலாளர் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரிய சாமி கேட்டபோது, “தொகுதியை சேர்ந்த பல மாணவர்கள் பெங்களூர், சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொறியியல் படித்த மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் சீவல்சரகு ஊராட்சி சுதனாகிய புரத்தில் 8 மாடி கட்டிடத்துடன் டைட்டல்பார்க் அமைகிறது. இதுபோல இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர் நலன் கருதி தொழிலாளர் நல மருத்துவமனை(இஎஸ்ஐ)அமையவுள்ளது என்று கூறினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பிள்ளையார் நத்தம் முருகேசன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சபாஷ். அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் அரசன் சண்முகம், அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.