திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பகுதியில் தரணி சர்க்கரை ஆலை கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்புக்கான தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது. தோராயமாக தற்போது 21 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு அந்த சர்க்கரை ஆலை வழங்காமல் வைத்துள்ளது. தாங்கள் விற்பனை செய்த கரும்புக்கான தொகையை கேட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஆலை நிர்வாகத்தை சந்தித்து கேட்கும் பொழுது, இன்று போய் நாளை வா என அனுப்பி வைத்துவருகின்றனர்.
இது தொடர்பாக தாலுகா அளவில், மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில், நிலுவை தொகை குறித்து கரும்பு விவசாயிகள் புகார் கூறியபோது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் சொல்வார்களே தவிர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், அக்டோபர் 8ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தங்களது கரும்பு நிலுவை தொகையை உடனே பெற்று தர வேண்டும், விவசாயிகளை ஏமாற்றும் ஆலை மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராடினர்.