திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சே.நாச்சியார்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 40). இவருக்கு ரத்னா (வயது 32) என்ற மனைவியும், இத்தம்பதியருக்கு ராஜலட்சுமி (வயது 5) மற்றும் தேஜா ஸ்ரீ (வயது 2) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளது. இதற்கிடையில் மூன்றாவது பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரத்னா சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பிறகு தனது பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டில் ரத்னா இருந்துள்ளார்.
இந்நிலையில் ராமஜெயம் திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக சென்னை சென்றுள்ளார். அதன் பின்னர் தனது குடும்பத்தினரையும், உறவினரான ராஜேஷ் (வயது 29) என்பவரையும் அழைத்துக்கொண்டு காரில் நேற்று முன்தினம் இரவு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு என்ற பகுதியில் வந்தபோது இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்னா மற்றும் அவரது 2 பெண் குழந்தைகள், உறவினரான ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த ராமஜெயம் மற்றும் அவரது 3 மாத ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் 3 மூன்று மாத ஆண் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.