கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சிக்கித் தவித்த வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள், வெளிமாவட்டங்களில் பணியாற்றிய கூலித்தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தற்போது தங்களது ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் கடந்த மே 24- ஆம் தேதி வரை சுமார் 10,500 பேர் வருகை தந்துள்ளனர். பதிவு செய்துவிட்டு வருபவர்களை தனிமைப்படுத்தி தங்கவைத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, முடிவுகள் கரோனா நெகட்டிவ் என வந்தபின்பே அவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர். பாசிட்டிவ் என வருபவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25/05/2020) மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 38 பேர் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சுமார் 400 பேருக்கு மேல் பரிசோதனை முடிவுகள் வராமல் உள்ளது, அவைகள் வரும் பட்சத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது.