திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது, கிரிவலப்பாதையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், தமிழகத்தில் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் கரோனா நோய் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. ஏழை, எளிய மக்களின் வசதிக்காக மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. ஏரிகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து குடிமராமத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிடைக்கும் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது. விவசாயம் தழைத்தோங்க, வண்டல் மண் பெரும்பங்காற்றுகிறது. வண்டல் மண் மூலம் நல் விளைச்சல் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கனிவுடன் அணுகி, அவர்களுக்கான நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு முதல்வர் பேசினார்.