கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை என்ற திரைப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வயிற்றைக் கொடூரமாகக் கிழித்து குழந்தையை எடுப்பார் அப்படத்தின் வில்லன் ஆன ஆர்.கே.சுரேஷ். இந்தக் காட்சியைப் படத்தில் வைத்ததற்காக இயக்குனர் பாலாவையும், நடிகர் ஆர்.கே.சுரேஷையும் பலர் விமர்சித்தனர். இந்த சினிமா பட காட்சியை நிஜகாதலிக்கு அரகேற்றியுள்ளான் ஒரு கொடூர காதலன்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதே ஆன அரசுக் கல்லூரி மாணவி சித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சவுந்தர் என்பவரும் சித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையிலும் சந்தித்து காதலித்து வந்தவர்கள் எல்லையை மீறியதால், சித்ரா கர்ப்பமாகி உள்ளார். இந்த விஷயம் நாளடைவில் தெரிய வர, வெளியே யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க பல முயற்சிகளை இருவரும் எடுத்துள்ளனர்.
இது பலன் அளிக்காத நிலையில், அந்த பெண் 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் காதலன் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள காப்புக்காடு ஒன்றுக்கு மார்ச் மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை அழைத்துச் சென்று யுடியூப் வீடியோ பார்த்து ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
இதில் அந்த இளம் பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தற்போது அந்த இளம் பெண் ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் செய்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபரீத காதல் கர்ப்பத்தை மூடிமறைக்க இளம் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்த சவுந்தரை, கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதாரண நபர் அறுவை சிகிச்சை செய்வது என்பது சாத்தியமான விஷயம் அல்ல. மேலும் ஆபரேஷன் செய்து வயிற்றுப் பகுதியைக் கிழித்து எடுக்க எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் செய்ய முடியாது. அதே போல மயக்க மருந்து செலுத்தாமலும் இப்படிச் செய்ய முடியாது என்பதால் மருத்துவம் தெரிந்த யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசரணை நடத்தி வருகின்றனர்.