திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களைத் தாக்குவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பர்பாளையம் அருகே உள்ள திலகர் நகர் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் தமிழக தொழிலாளரைத் தாக்குவதாக வீடியோ காட்சிகள் கடந்த 14 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இது தொடர்பாக தமிழக தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திலும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவ், சமூக வலைத்தளத்தில் வெளியான தாக்குதல் தொடர்பான பொய்யான தகவலைப் பரப்பி தேவையில்லாமல் பதற்றம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பீகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரிவு-147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), பிரிவு-148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்) பிரிவு- 294 பி (பொது இடத்தில் அவதூறாகப் பேசுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.