திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தமன்குப்பம் அருந்ததியர் காலனி பகுதியில் கடந்த 10- ஆம் தேதி தொடர்மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்து அன்னைம்மாள் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.
கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி வங்கிக் கணக் கு பணப் பரிமாற்றத்தில் மோசடி செய்து, வீடு கட்டப்பட்டதாகக் கணக்கு காட்டியுள்ளனர். அதனால் வீடு கட்டமுடியாமல் குடிசை வீட்டில் வசித்து வந்ததால் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்தில் பலியானார்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்த நிலையில் தாயும் உயிரிழந்ததால் அவர்களுடைய 13 வயது சிறுவன் அந்தோணிராஜ் என்கிற ராகுல்காந்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக வெளியான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், இச்சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம், இந்த விவகாரத்தை அமுக்க நினைத்த ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையின் மாவட்ட அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.