தமிழகத்தின் 16வது சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையர் அரோரா பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனால் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் சட்டமன்ற அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அமைச்சர்கள் பயன்படுத்தும் அரசு கார்கள், அரசு உதவியாளர்கள் அனைவரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் தேர்தல் கூட்டங்கள் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நடைபெறத் துவங்கியுள்ளன. இதில், அரசியல் கட்சிகள் செய்துள்ள விளம்பரங்கள், போஸ்டர்கள் அனைத்தும் பொது இடங்கள், தனியார் இடங்களில் இருந்து அகற்றும் பணியில் நகராட்சி, ஊராட்சி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அதனை அழித்தும், அகற்றியும் வருகின்றனர்.
தேர்தல் நடைமுறை துவங்கிவிட்டதால் அரசின் நிகழ்ச்சிகள், மக்கள் குறை தீர்வு கூட்டங்கள், விவசாயிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குறை தீர்வு கூட்டங்கள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், தேர்தல் நடைமுறை துவங்கிவிட்டதால், அனுமதிபெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.