திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். இவர் அப்பகுதியின் சமூக ஆர்வலராக வலம் வந்தவர். மக்களுக்கு மனுக்கள் எழுதித் தருவது, அப்பகுதியில் நடக்கும் தவறுகளை அதிகாரிகளுக்குப் புகாராக அனுப்புவது, சாராயம் விற்பனையாளர்களைக் காவல்துறையினரிடம் சொல்வது, மக்களுக்கு எதிராகச் செயல்படும் காவல்துறையினரை எதிர்த்து போஸ்டர், நோட்டீஸ் அடிப்பது, போராடுவது என இருந்துவந்தார்.
இவர், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஆம்பூர் அடுத்த மாபுதூர் பகுதியில் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டிருந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணை சரியாக நடக்காது என தணிகாச்சலத்தின் உறவினர்கள் புகார் கூறினர். குற்றவாளிகள் என அடையாளம் சொல்லப்படுபவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமுமில்லை என்பதால் வழக்கை கைவிடுகிறோம் என காவல்துறை, நீதிமன்றத்தில் கூறியது.
இதில் நீதிமன்றம் அதிருப்தியடைந்தது, ஒரே கோணத்தில் விசாரணை நடத்தினால் கொலை குற்றவாளியை எப்படிப் பிடிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும்,இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த வழக்கை வைத்திருந்தது.
இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட தணிகாச்சலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டியின் சென்னை பிரிவு டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் 8 சி.பி.சி.ஐ.டி போலீஸார், ஆம்பூர் சென்று ஆம்பூர் தாலுக்கா காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் மாதனூர் அடுத்த பாலூரைச் சேர்ந்த லோகேஷ், கார்த்தி, ஜெகதீஷ், சாம்பசிவராவ் என நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கொலை செய்யப்பட்டு முழுதாக 5 ஆண்டுகள் முடிந்தபின் கொலைகாரர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் சி.பி.சி.ஐ.டி அடைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.