நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவிலைப் பிரித்து புதிய மாவட்டமான தென்காசியில் இணைக்கும் போதே சங்கரன்கோவில் தொகுதி மக்கள், அது போக்குவரத்து மற்றும் கல்வி மருத்துவ வசதிகளுக்குச் சிரமம், தொலை தூரம் என்றெல்லாம் கண்டனக் குரல் எழுப்பினார்கள். அதுமட்டும் இல்லாமல் கடையடைப்பு, பேரணிகள் போன்றவற்றை நடத்தினர். மேலும் நிறுத்திவைக்கப்பட்ட நெல்லை தென்காசி 9 புதிய மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் வரும் ஏப்ரலில் நடக்க உள்ளதாக தகவல்கள் கிளம்பின. அதன் முன்னோட்டமாக வார்டு மறுவரையறை தொடர்பாக மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் குளறுபடி பற்றிய புகார்கள் பறந்தன.
மாவட்டத்தின் சங்கரன்கோவிலின் குருவிகுளம் யூனியனின் மலையாங்குளம் பஞ்சாயத்தின் 5 கிராமங்கள் பிரிக்கப்பட்டு 20 கி.மீ. தொலைவிலுள்ள மேலநீலிதநல்லூர் யூனியனோடு இணைத்ததை அந்த மக்கள் எதிர்த்தனர். மேலும் வார்டு மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்த மாநில தேர்தல் ஆணையரிடம் மலையாங்குளம் மக்களோடு சென்ற விவசாய சங்கத் தலைவர் சந்தானமும், மக்களும், தங்களின் சிரமம் பற்றிக் கூறினர். அரசியல் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டதைச் கூட்டிக்காட்டினர் மேலும் தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தின் தலைவருமான பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பலரும் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை சுட்டிக்காட்டினர். இனசுழற்சி முறை, முறையாக பின் பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் வார்டு மறுவரையறை என்பது சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தனர். குறைகளை மனுவாக கொடுக்குமாறு மறுவரையறை ஆணையர் கேட்டுக் கொண்டதையடுத்து பெரும்பாலானோர் மனுக்களாக கொடுத்தனர்.