சூடான் நாட்டில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் 200-க்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினா், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 18- பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 6 பேர் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த 6 தமிழர்களில் ராஜசேகர் என்பவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருவன் மகன் ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய ராஜசேகர் தீ விபத்தில் பலியாகி உள்ளார். 36 வயதான ராஜசேகர், கடந்த 2017- ஆம் ஆண்டில் சூடான் சென்று அங்கு ஹர்டோப் என்னுமிடத்திலுள்ள செராமிக் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் எல்.பி.ஜி கேஸ் கசிவின் மூலம் ஏற்பட்ட விபத்தில் ராஜசேகரும் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த ராஜசேகரின் மனைவி கலைசுந்தரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில், 'தனது கணவர் ராஜசேகர் சடலத்தை சொந்த ஊரான மானடிக்குப்பத்தில் நல்லடக்கம் செய்ய ஏதுவாக சடலத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாடு வேலைக்கு சென்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் ராஜசேகர் உயிரிழந்ததால் அவரின் சொந்த கிராமமான மானடிக்குப்பம் கிரமம்மே சோகத்தில் மூழ்கியுள்ளது.