திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சி குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் மும்பையில் வசித்து வந்திருக்கிறார். சொந்த ஊரில் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெறுவதால் அதற்காக குறிச்சி குளம் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து தாழையூத்து சென்றுவிட்டு தனது பைக்கில் ஊர் திரும்பியிருக்கிறார். அப்போது குறிச்சிகுளம் நான்கு வழிச்சாலை வழியாக வரும்போது செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. பைக்கை ஓரமாக நிறுத்திய வெள்ளியப்பன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அங்கு திடீரென்று வந்த கும்பல் ஒன்று அவரை சூழ்ந்து கொண்டு அரிவாளால் தலையின் பல பகுதிகளில் தாக்கி உள்ளனர். இதனால் அலறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே வெள்ளியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து டி.எஸ்.பி ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார், வெள்ளியப்பனுக்கும் நெல்லைப் பகுதியில் திருமணமான பெண் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் வெள்ளியப்பன்; இதனால் பெண்ணின் உறவினர்களுக்கும் வெள்ளியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக மணிகண்டன், நாகராஜன், பெண்ணின் தந்தையான மூக்கன் மற்றும் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரை பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.