கரோனா தொற்று அபாயம் காரணமாக நெல்லையில் தர்ப்பணம் செய்ய தடை விதித்த காரணத்தால் அருவிக்கரை நீர் நிலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாதங்கள் தோறும் அமாவாசைகள் வந்து போகின்றன. அவைகளில் ஆடி, மற்றும் தை மாத அமாவாசை தினங்கள் மிகவும் சக்தி கொண்டவை என்ற நம்பிக்கை ஆன்மீக வழிபாட்டிலிருக்கும் இந்துக்களின் எண்ணம்.
அந்த நாட்களில் ஆற்றோரப்படுகை, அருவிக்கரை, கடல், குளம் மற்றும் சிவனாலயம் தொடர்பான இடங்களில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி போன்றவைகளை நடத்தி நீராடிவிட்டு மறைந்த தங்களின் முன்னோர்களை வழிபடுவார்கள். அதன்மூலம், ஆவியாய் அலைபாய்கிற அந்த முன்னோர்களின் ஆன்மா அமைதியடையும் என்பது மரபு வழியான நம்பிக்கையாகும். எனவே அன்றைய முக்கிய வீரியமான அமாவாசை நாட்களில் தாமிரபரணிக்கரை, முறப்பாடு சிவனாலயத்துடன் கூடிய தாமிரபரணிப் படுகை, தென்காசி மாவட்டத்தின் குற்றாலம், அருவிக்கரைகளில் தர்ப்பணம் செய்வதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுவதுண்டு.
இன்று ஆடி அமாவாசை. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்று செகண்ட் இன்னிங்ஸாய் சுனாமிப் பாய்ச்சலில் இருக்கிறது. மக்கள் கூடும் கூட்டம் காரணமாக லாக்டவுண் காலத்திலும் அருவிக்கரையோரம், குற்றாலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் பொருட்டு கூட்டம் கூடினால், தொற்றுப் பரவல் அதிகமாகும் என்ற காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அதற்கு தடை போட்டுவிட்டது. தென்காசி மாவட்டத்தின் ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன், தனது வீட்டுப் பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், கடந்த நான்கு நாட்களாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டவர், வீட்டிலிருந்தே அலுவல்களைக் கவனிக்கிறாராம்.
நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பாவோ, மக்கள் தர்ப்பணம் செய்து நீராடுவதை தவிர்த்து நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதன் காரணமாக மாவட்டங்களின் தர்ப்பணப் பகுதிகளனைத்தும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தர்ப்பணப் பகுதிகள் ஆளின்றி காற்று வாங்குகின்றன. அதேசமயம் குருக்களுக்கு முக்கியமான வருமான தினம் இன்றைய ஆடி அமாவாசை.
அவர்களின் பிழைப்பு மட்டுமல்ல, இன்னும் மக்களின் எத்தனை நலன்களில் கைவைக்க காத்திருக்கிறதோ கரோனா.