ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ரயில்வே துறை டி.ஐ.ஜி.யும், தீயணைப்பு துறை இயக்குனருமான சைலேந்திரபாபு இன்று ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தீயணைப்புத் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை பார்வையிட்டார். அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தீயணைப்பு நிலைய ஊழியர்களுக்கு புதிதாக குடியிருப்புகள் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டன. அதனையும் பார்வையிட்டார்.
பிறகு தீயணைப்பு நிலைய வீரர்கள் மத்தியில் அவர் பேசும்போது, தீயணைப்பு நிலைய வீரர்கள் 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் பொதுமக்களுடன் இணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். இது உங்களுக்கு கடினமான பணி சுமை இருப்பதால் உங்களின் உடல் நலனை பேணி காப்பது அவசியம். இதற்காக நீங்கள் தினமும் உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். வீரர்கள் எப்போதும் முழு உடல் தகுதியுடன் பிட்டாக இருக்க வேண்டும் என கூறினார்.