திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக 1 கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை அகற்றக் கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர், குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது, என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர். 30.01.1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் வரை கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயிலில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது. கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது,விதிகளை மீறி பல கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளது. இதில் 7 கட்டிடங்கள் தற்போது கட்டிட பணியில் உள்ளது,5 வணிக கட்டிடங்களும் 63 கட்டிடங்கள் அரசாணை பிறப்பித்தற்கு பிறகு கட்டப்பட்டுள்ளது. விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி வழக்கறிஞர் ஆணையாளரை நியமனம் செய்யவும் மனுவில் கூறிருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் M.M.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இது குறித்து மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.