நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த தேவா என்கிற தேவராஜன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர் கடந்த 19 ஆம் தேதி தனது உதவியாளருடன் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவராஜன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரின் செல்போன்களை சோதனை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தேவராஜனின் மனைவி சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனைக் கண்டித்ததால் தேவராஜனை அவரது மனைவியே விமல்குமாரின் உதவியுடன் திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என உறுதியானது.
இதனைத் தொடர்ந்து விமல்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், “தொழில் ரீதியாக எனக்கும் தேவராஜனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது. இதனால் அவரது வீட்டிற்கு சென்று வந்ததில் அவரது மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கு தேவராஜ் முட்டுக்கட்டையாக இருந்தார். எனவே அவரை கொலை செய்ய நானும் தேவராஜன் மனைவியும் திட்டமிட்டோம். தேவராஜனை கொலை செய்ய எனது நண்பரான குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் கோபாலகிருஷ்ணனிடம் உதவி கேட்டேன். மேலும், தேவராஜன் ஆயுள் காப்பீடு செய்து வைத்துள்ள 10 லட்சம் ரூபாய் அவரது இறப்புக்குப் பின் வரும் போது அதில் இரண்டு லட்சம் ரூபாயை தருவதாக பேரம் பேசினேன்.
இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி தேவராஜனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு எலக்ட்ரிக் வேலை செய்ய வேண்டி உள்ளது எனக் கூறி அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வரவழைத்தேன். பின்பு கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூலிப்படையினர் தேவராஜனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்" என்று தெரிவித்து உள்ளார். இதே வாக்குமூலத்தையே தேவராஜின் மனைவியும் போலீசில் தெரிவித்து உள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பிச்சென்ற கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.