நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூரில் உல்ள ஒரு வீட்டில், யானைத் தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக திருச்செங்கோடு டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி சண்முகம் மற்றும் காவல்துறையினர், புகாருக்குரிய சுப்ரமணி மகன் சதீஷ்குமார் (26) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவை சுமார் 3 கிலோ எடை அளவில் இருந்தன.
இந்த வகையிலான குற்றங்கள் வன இலாகாவின் கீழ் வரும் என்பதால், இதுகுறித்து காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். கைப்பற்றப்பட்ட தந்தந்தங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சதீஷ்குமார் உள்பட இரண்டு பேரை கைது செய்தனர்.
இதுபற்றி நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறுகையில், ''சதீஷ்குமார் என்பவர் வீட்டில் இருந்து ஒரு ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் எடை, 2.5 கிலோ. இரண்டும் சராசரியாக 70 செ.மீ., நீளம் உள்ளன. ஏதாவது நம்பிக்கையின் அடிப்படையில் யானைத் தந்தங்களை வாங்கியிருக்க வேண்டும். இவர்களுக்கு எப்படி தந்தங்கள் கிடைத்தன? என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். கைதான இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.