காவலர்கள் தங்கள் சொந்த விஷயங்களுக்காக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது டிக்கெட் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு திட்டக்குடியைச் சேர்ந்த காவலர் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொண்டபோது, நடத்துனருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கைகலப்பானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அந்த சமயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் மாரடைப்பு காரணமாக நடத்துனர் மரணமடைந்தார். இதுதொடர்பாக மாநில மனிதநல உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திவரும் நிலையில், தற்போது புது உத்தரவு ஒன்றை தமிழ்நாடு காவல்துறைக்கு சைலேந்திரபாபு சுற்றறிக்கை வழியாக தெரிவித்துள்ளார்.
அதில், கைதிகளை அழைத்துச் செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள், காவல்துறை சார்ந்த பணிகளைத் தவிர சொந்த காரணங்களுக்காக செல்லும்போது காவல்துறையினர் பேருந்தில் பயணச் சீட்டு பெற வேண்டும். அதேபோல் இவை முறையாக நடைபெறுகிறதா என அதிகாரிகள் கண்காணித்து, விதிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.