திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத், அபுதாபி, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று (11.10.2024) மாலை திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா புறப்பட்டுச் செல்ல முயன்றது. அப்போது மேலெழும்பிய விமானத்தின் சக்கரங்கள் இரண்டும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாததை விமான ஓட்டிகள் கண்டறிந்தனர்.
இதனால் விமானிகள் மீண்டும் திருச்சி கிளம்பி விமானத்தைத் தரையிறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விமானம் வானில் தொடர்ந்து வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உள்ள எரிபொருளைக் குறைத்த பிறகு தரையிறக்கலாம் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதே சமயம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஆம்புலன்ஸ்கள் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்குக்காக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுமார் 2 மணி நேரமாக 141 பயணிகளுடன் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய போது பயங்கர புகை வந்தது குறிப்பிடத்தக்கது.