Skip to main content

நீதிமன்ற அவமதிப்பு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் வாபஸ்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக முதலில் வாரண்ட் பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்,  பின்னர் அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வாரண்ட்டை திரும்பப் பெற்று, வழக்கை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

hh


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு, 5,500 ரூபாய் இழப்பீடாக வழங்க காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தாரர்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை சென்ட்டுக்கு 10 ஆயிரத்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க, 2012 -ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு சென்ட்டுக்கு 10,325 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கக் கோரி, நில உரிமையாளர் ஆனந்த்குமார்  விண்ணப்பித்தார். தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, ஆனந்த்குமாரின் விண்ணப்பத்தை  நிராகரித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆனந்த்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஆனந்த்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டும் ஆஜராகாததால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர்,  அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வாரண்ட்டை திரும்பப் பெற்று, வழக்கை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்