தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 3ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி அங்குச் சென்றார். அப்போது அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்மீது சேற்றை வாரி வீசினர். இவ்வாறு வீசப்பட்ட சேறு அமைச்சர் மீது மட்டுமின்றி அவருடன் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய ராமகிருஷ்ணன், விஜய ராணி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.