கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கீழக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(56). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்திற்குச் சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள பசு மாடு வளர்ப்போர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் பணியைச் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக வேப்பூர் அருகே உள்ள கழுகுதூரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் இருந்து 45,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். அதைத் தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு அங்கிருந்து வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வேப்பூர் பஸ் நிலையம் எதிரே வந்த போது அவரது இரு சக்கர வாகன டயர் பஞ்சரானது. இதையடுத்து பஞ்சர் ஒட்டுவதற்காக அருகிலுள்ள பஞ்சர் கடைக்கு வாகனத்தைக் கொண்டு சென்று நிறுத்தினார். பஞ்சர் ஒட்டி முடிப்பதற்குள் டீ குடித்து விட்டு வரலாம் என்று கிளம்பிய வெங்கடேசன் சமயோசிதமாக பைக் பெட்டியில் வைத்திருந்த 45000 பணத்தை கையோடு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அருகில் இருந்த டீ கடைக்குச் சென்று டீ குடித்து விட்டுச் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது அவரது பைக்பெட்டியை கள்ளச்சாவிப் போட்டு மூன்று இளைஞர்கள் திறந்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சத்தம் போடாமல் நைசாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு அந்த மூன்று இளைஞர்களை வளைத்துப் பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் சேர்ந்த செந்தில்குமார்(35), பாரதிராஜா(26), சேலம் மாவட்டம் கிச்சிப் பாளையத்தை சேர்ந்த சித்து ராஜா(26) என தெரியவந்தது. மேலும் இந்த மூன்று பேரும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து போது கையும் களவுமாக பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.