வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு காட்பாடி பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், காட்பாடி டி.எஸ்.பி.பழனி தலைமையிலான காவல் துறையினர் காட்பாடி அடுத்த பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரியவந்ததை தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
இதில் இளம்பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்த சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த யாசின்(35), ராம்குமார் (25), சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயசெந்தில் (40) ஆகிய மூவரைக் கைது செய்தனர். அங்கிருந்த பெண்களை முகவரி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் மூவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த மூவரும் காட்பாடியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காட்பாடியில் ஒரு நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்குப் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் வெளி மாநிலம், வெளிநாடு மாணவ மாணவிகளும் இங்குப் படித்து வருகின்றனர். காட்பாடிக்கு அருகில் மற்றொரு பல்கலைக்கழகமும் உள்ளது. மேலும், சில கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழிலை நடத்தியுள்ளனர். இதற்காக சென்னை, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலை இவர்கள் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.