கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ளது ஆலத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). கோழி இறைச்சிக் கடை வைத்து நடத்திவருகிறார். மேலும் இவர் கூடுதலாக மர வியாபாரமும் செய்துவருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான சரவணன் (32) ஆகிய இருவரும் நேற்று (30.06.2021) காலை ஆலத்தூரில் இருந்து மர வியாபாரம் சம்பந்தமாக ஒரு ஆட்டோவில் சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அதே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதே நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.
ஆலத்தூர் அருகே அந்த லாரி மணிகண்டன் ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த ராஜேந்திரன், சரவணன், ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சேதமடைந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். விபத்து நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அவர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார்.
விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஆலத்தூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த மாதம் இதே பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஜெயலட்சுமி என்ற கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவத்துக்கு ஏற்றிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் சமீபகாலமாக அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன. காவல்துறை போக்குவரத்துத் துறை விபத்துகளைத் தடுப்பதற்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து வாகன ஓட்டிகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.