கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை கடற்கரை ஓரத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 8 பொட்டலங்கள் கிடந்தன. அதை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் அலட்சியமாக வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாமல்லபுரம் அருகே ஒதுங்கிய இரும்பு தொட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருள் சிக்கியது. அதேபோன்ற போதை பொருள்தான் புதுப்பேட்டையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல்படை மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளில் 3 பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிதம்பரம் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் சமர்பித்தார்.
அதனடிப்படையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆனந்தன், எஸ்.பி.யின் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார், முதுநிலை காவலர் பாக்கியராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த மூன்று பேரையும் விழுப்புரம் சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் “போதை பாக்கெட் என்று தெரியாமல், காலாவதியான டீ தூள் தானே எனக்கருதி காவல்நிலையத்தில் குப்பைகளை போடும் இடத்தில் போட்டு வைத்து விட்டோம். அப்படி போட்டு வைக்கும் குப்பைகளை மாதம் ஒருமுறை சுத்தம் செய்யும்போது, காலியான டீ தூள் என நினைத்து குப்பையை கொளுத்திவிட்டவர்கள் அவர்களின் கண்ணில் பட்ட பொட்டலங்களை எரித்திருக்கலாம், மற்றபடி அதனை யாரும் எடுக்கவில்லை” என்பதே அங்கு பணிபுரியும் போலீசாரின் தகவலாக உள்ளது.