ஆட்குறைப்பு அரசாணை 56-ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி வருகின்ற மார்ச் -13 அன்று அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன மாநாட்டு விளக்கப்பேரவை மற்றும் நிதியளிப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு, மாநிலச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆட்குறைப்பு அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்ற மார்ச்- 13 அன்று அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டுப் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில் ரூ.1,50,000 நிதி வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வரவேற்க, பொருளாளர் கே.குமரேசன் நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் ரமா ராமநாதன், அன்னபூரணம், பழனிச்சாமி, பாலமுருகன், துரை.அரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.