
கோவை மாவட்டம், வால்பாறை மலையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், வால்பாறையின் காமராஜர் நகர், சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நுழையும் சிறுத்தைகள், அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகளைப் பிடித்துச் செல்வது தொடர்கதையாகிவருகிறது.
வால்பாறையின் குமரன் நகர், ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் நேற்று (09.07.2021) நள்ளிரவில் மூன்று சிறுத்தைகள் சுற்றிவந்தன. இந்தக் காட்சி அப்பகுதியிலுள்ள குமரன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள டாக்டர் மஜீன்தார் என்பவரது வீட்டில் வளர்ந்துவந்த நாய் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருந்தநிலையில், மாடியிலிருந்த அந்த நாயை சிறுத்தை பிடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி நடமாடிவரும் சிறுத்தைகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.