கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இன்று காலை தனது வயலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது வயல் கிணற்றில் மூன்று சடலங்கள் மிதந்ததைக் கண்டு உடனடியாக சிறுபாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறுபாக்கம் காவல்துறையினர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து 3 சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உட்பட மூன்று பெண்கள் சடலமாக கிணற்றில் மிதந்தது குறித்து அப்பகுதியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சிவகுருநாதன் (39) என்பவருக்கு ஏற்கனவே சுமதி என்ற பெண்ணோடு காதல் திருமணமாகி இவர்களுக்கு 17, 8 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மங்களூரில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் 2004-இல் சென்னையில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிஸ்பசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சிவகுருநாதனின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினையில் சுமதி 2016-இல் தூக்கு போட்டு இறந்து விட்டார். அதன் பிறகு 2019-இல் ஊருக்கு வந்த சிவகுருநாதன் தனது பிள்ளைகள் மற்றும் அம்மாவுடன் வசித்து கொண்டு மங்களூரில் உள்ள பர்னிச்சர் கடையில் 2020-இல் இருந்து வேலை செய்து வருகிறார்.
2004-இல் சென்னையில் வேலை பார்க்கும் போது மிஸ்பசாந்தி என்பவரது வீட்டில் தங்கி இருந்தபோது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. சிவகுருநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019-இல் சிவகுருநாதன் சொந்த ஊரான மலையனூருக்கு வந்து விட்டார். மிஸ்பசாந்தி தனது மகளோடு சென்னையிலிருந்து அவ்வப்போது மலையனூர் வந்து சிவகுருநாதனை பார்த்து விட்டு சென்றுள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களாக இருவருக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்கள். கடந்த 27.11.22 அன்று மிஸ்பசாந்தி (35) அவரது மகள் அருள் ஹெலன் கிரேஸ் (வயது 8), அவரது அம்மா தேபோரால் கல்யாணி (60) மூவரும் மலையனூர் சிவகுருநாதன் வீட்டிற்கு வந்து இங்கேயே இருக்கப் போவதாகவும், தனியாக வீடு பார்க்கவும் சொல்லி உள்ளார்கள். அவரும் மலையனூரில் தனியாக வீடு பார்த்து கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளார்கள். நேற்று (30.11.22) இரவு 11.00 மணியளவில் சிவகுருநாதன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக பார்க்கச் சென்றுள்ளார். அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களை தேடிப் பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், அவர்களிடம் தொடர்பு கொள்ள செல்போன் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். இதனிடையே இன்று (01.12.22) காலை 07.00 மணியளவில் வேல்முருகன் என்பவரது கிணற்றில் மூவரும் இறந்த நிலையில் மிதந்துள்ளார்கள் என்று அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தகவல் சொன்னதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர் என்றனர்.
8 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கிணற்றில் சடலமாக மிதந்தது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.