விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை விழுப்புரம் ரயில்வே ஜங்ஷன் அருகில் பாண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களின் பேச்சில் முரண்பாடுகள் தோன்றியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மூவரும் விழுப்புரம் சிந்தாமணி ரோட்டை சேர்ந்த அரவிந்தசாமி, விஜய், ஜோதி என்பது தெரியவந்தது. சமீபத்தில் விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள பால் விற்பனை நிலையத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் திருடி உள்ளனர்.
20 நாட்களுக்கு முன்பு கீழ் பெரும்பாக்கத்தில் ஒரு மூதாட்டியிடம் அரை சவரன் நகை திருடியது நான்கு மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து லேப்டாப் திருடியுள்ளனர். இப்படி அடிக்கடி தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த அரை சவரன் நகை ரூ.30 ஆயிரம் பணம், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான மூவர் மீதும் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.