
நாகையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை 20 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் பிடித்துள்ளனர் காவல்துறையினர். மேலும் தப்பியோடிய இரண்டு பெண் கஞ்சா வியாபாரிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாகை நகரப்பகுதியில் அளவுக்கு அதிகமாக கஞ்சா விற்பனை நடந்துவருவதாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பிறகு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நாகை தர்மகோவில் தெருவில் 3 பெண்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா வாங்க செல்லும் இளைஞர்களைபோல் சென்று கஞ்சா வியாபாரிகளை சுற்றி வளைத்து கஞ்சா விற்பனை செய்த கலைச்செல்வி என்பவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5 கிராம் எடைகொண்ட, 20 கிலோ 400 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய ராணி, நதியா ஆகிய இரண்டு பெண் கஞ்சா வியாபாரிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.