Skip to main content

நீட் - நாங்களும் உதவ தயார்: தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்... : பாரதிராஜா

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
Bharathiraja


பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் ஏழை மாணவர்களுக்கான பயணத்திற்கு நாங்களும் உதவ தயாராக இருக்கிறோம் என்றும், தமிழ்நாட்டில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் தேர்வு இருக்கிறது என்று இயக்குனர் பாரதிராஜா கூறி உள்ளார். 
 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 

தமிழ்நாட்டில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் தேர்வு இருக்கிறது. இன்று அந்தத் தேர்விலும் கூட எம்பிள்ளைகள் போட்டியிட்டு வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக, தமிழ் நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்காமல் வெளி மாநிலங்களுக்கு அவசர கதியில் போய்ச்சேர வேண்டிய வன்மையான நிலையை உருவாக்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு.
 

இந்த இக்கட்டான சூழலை எம்பிள்ளைகள் மன வலிமையோடு எதிர்கொள்ள தயாரானாலும், தேர்வு மையத்தை நெருங்கிவிட முடியாத நிலையும் வலிந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எம் பிள்ளைகளின் உழைப்பும் முயற்சியும் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதே மைய அரசின் நோக்கம்.
 

எனவே தேர்வு எழுத அயல் மாநிலங்களுக்கு செல்லும் எம்மாணவ செல்வங்கள் தேர்வு மையத்துக்குசென்று தேர்வு எழுதி, தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாட்டை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து தருவதோடு எம்பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
 

தனியார் சிலர் உதவிகள் செய்தாலும், அரசே தாமதிக்காது ஏற்பாடு செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் ஏழை மாணவர்களுக்கான பயணத்திற்கு நாங்களும் உதவ தயாராக இருக்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 9884284853, 9884842929.
 

அவசரநிலை கருதி நாங்கள் இந்த ஏற்பாட்டில் பங்கு கொண்டாலும், என்றைக்கும் நீட் தேர்வை தமிழ்நாடு ஏற்காது.
 

கடந்த ஆண்டு நீட்டை எதிர்த்த தமிழ்நாட்டில், மையம் அமையுங்கள் என்று கேட்க வைத்ததன் மூலமாக பா.ஜனதா அரசின் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டதாக மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கப்போவது உறுதி. தமிழ்நாடு நீட்டை ஏற்று கொண்டது என்கிற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் நீங்கள் தோற்கப் போவது உறுதி.
 

எங்கள் பிள்ளைகள் உள்ளம் சோர்ந்து விடாமல் இருக்கவே நாங்கள் இப்போது நீட் தேர்வு வி‌ஷயத்தை அற வழியில் கையாளுகிறோம். தேர்வுக்காக வெளிமாநிலம் செல்லும் எம்பிள்ளைகளுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் அங்கு இருப்பவர்கள் எதிர்வரும் காலத்தில் எதற்காகவும் தமிழ்நாட்டில் கால்வைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
 

இந்த நேரத்தில் கேரளாவுக்கு தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்