பள்ளிபாளையம் அருகே, முதியவரின் மரணத்தில் இருந்த மர்மம் விலகியது. பள்ளி வளாகத்தில் மது குடிப்பதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மூன்று பேர் முதியவரை தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (78). இவர், கடந்த மார்ச் 30ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்த கட்டிலில் சடலமாகக் கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய பள்ளிபாளையம் காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த முதியவர், மூச்சுத் திணறலால் இறந்திருப்பது தெரிய வந்தது. அதேநேரம் அவருடைய நெஞ்சில் உள் காயமும் இருந்ததால், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு வாலிபர்கள் சிலர் அந்த முதியவருடன் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி வளாகத்திற்குள் அடிக்கடி வந்து செல்லும் உள்ளூரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், வஉசி நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (21), கூலித்தொழிலாளிகள் பிரபு ராம் (19), மாணிக்கம் (19) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நடராஜை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
லாரி ஓட்டுநரான மணிகண்டன், வெளியூர் சென்று வரும்போது மதுபானங்கள் வாங்கி வருவதும், அடிக்கடி அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மது குடிப்பதும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். சம்பவத்தன்றும் மணிகண்டனும் கூட்டாளிகளான பிரபு ராம், மாணிக்கம் ஆகியோரும் அந்தப் பள்ளிக்குள் சென்று மது குடித்துள்ளனர். இதைக்கண்ட முதியவர் நடராஜ், அவர்களை சத்தம் போட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அவர்கள், ஆத்திரத்தில் அந்த முதியவரை தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகும் அவர்கள், கீழே கிடந்த கல்லைத் தூக்கி நெஞ்சின் மீது போட்டுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பிறகு மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்தது.
பள்ளி வளாகத்திற்குள் மது குடிக்கக் கூடாது என்று சொன்னதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை குமாரபாளையம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.