சீர்காழியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில் மூன்று பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் முகமது யூனுஸ், இவரது மகள் சமீராபானு. 20 வயதான சமீரா பானுவும், அவரது பாட்டி கதீஜாபீவியும், அவரது வீட்டில் வேலைபார்க்கும் பாண்டியம்மாளும் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை எச்சிலை துப்புவதற்கு வெளியில் வந்த பாண்டியம்மாளை பதுங்கியிருந்த மர்ம நபர்களால் தலையில் கட்டையால் தாக்கியுள்ளனர், ரத்தவெள்ளத்தில் இருந்த பாண்டியம்மாளின் அலரலைக்கேட்டு ஓடிவந்த யூனுசின் மனைவி ரபியாபீவியும், அவரது மகன் நாசரும் பாண்டியம்மாள் தவறிகீழே விழுந்துவிட்டதாக நினைத்து காரில் தூக்கிக்கொண்டு மருத்துமனைக்கு சென்றனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து, சமீராபாணுவையும், அவரது பாட்டி கதீஜாபீவியையும் படுகொலை செய்துவிட்டு சென்றுவிட்டனர். பிறகு சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் சமீராபானு யாருடனாவது காதல் இருந்திருக்கலாம் அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை விவகாரத்தை மாற்றியது. அந்த பகுதிவாசிகளோ முன்பகை என கூறிவந்தனர். ஆனால் முகமதுயூனுஸ் எங்களுக்கு அப்படி தோணவில்லை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுங்கள் என மன்றாடி வந்தார். ஆனாலும் காவல்துறை அதில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தனது மகள் மற்றும் தாயை வெட்டி படுகொலை செய்தவர்களை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் 2015ம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 8 ஆண்டுகளாக இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் சுரேஷ் குமார் என்கிற சுரேஷ் அந்தனப்பேட்டை விஏஓ செல்வத்திடம் ஆஜராகி சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவன் என கூறி செல்வத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். பிறகு நாகை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ்குமார் என்கிற சுரேசை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுரேஷ் குமார் கொடுத்த வாக்குமூலத்தில், "நானும் எனது நண்பர்கள் கமல், ஆனந்த் ஆகிய மூவரும் சேர்ந்து, அந்த வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பாண்டியம்மாளை தாக்கினோம், நாங்கள் நினைத்ததுபோலவே வீட்டில் இருந்த ராபியாபீவியும், அவரது மகன் நாசரும் பாண்டியம்மாளை மருத்துவமனைக்கு தூக்கிகொண்டு போனார்கள், பிறகு வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சமீராபாணுவையும், அவரது பாட்டி காதீஜாபீவியையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றபோது, வெளியாட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பித்து விட்டோம்." என்று கூறியுள்ளனர். மேலும், கொலையில் ஈடுபட்ட இருவரை சுரேஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
2012ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையிலும், 2015 ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமபாக்கத்திலும் வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.