ஒமிக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ், படிப்படியாக இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மிகவும் ஆபத்தானதாக இருக்கும் இந்த வைரஸிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஒமிக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் வர கடும் கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை விதித்துள்ளது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் விமான நிலையத்தில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்து, இல்லை என்ற முடிவு வந்த பிறகே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், வீட்டிற்கு சென்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஒமிக்ரான் தொற்றை கண்டறிய 12 இடங்களில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. டேக்பாத் என்ற கிட் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.