Skip to main content

“திருநெல்வேலியா இருந்தா தலையை அறுத்திருப்போம்” - பெண் தாசில்தாருக்கு பகிரங்க மிரட்டல்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

 threat to Ambasamudram Tahsildar

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் சுமதி. இவர் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தலையாரிகளாக உள்ள உமாபதி, முத்துக்குமார், முத்துராமலிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய நான்கு பேரையும் அதே வட்டத்தில் உள்ள வேறு பகுதிகளுக்குப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு தலையாரிகளும் முத்துராமலிங்கம் செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் கடத்தலுக்கு உதவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், வட்டாட்சியர் சுமதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட நான்கு தலையாரிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 16 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலையாரிகள் சங்க மாநிலச் செயலாளர் பிச்சி குட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலையாரி சங்க மாவட்டத் தலைவர் சீவலப்பேரி முருகன் என்பவர், வட்டாட்சியர் சுமதியை மிகவும் தரக்குறைவாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார்.

 

அப்போது அவர் பேசும்போது, 'ஏய் அறிவுகெட்ட ஜென்மம். நீயெல்லாம் எப்படி வந்த வேலைக்கு? எங்களை மாதிரி படிச்சி வந்தியா? இல்ல எப்படி வந்த? மழை வெள்ளம் வந்தா நாங்கதான் ஓடிப்போய் உழைக்கிறோம். ஆனா நீ போவியா? இல்ல உங்கப்பன் போவானா...’ எனக் கண்டபடி ஒருமையில் பேசத் தொடங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்கே என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர்.

 

அதுமட்டுமின்றி,  சீவலப்பேரி முருகன் தொடர்ந்து பேசும்போது, "ஏய்... படுத்துக்கிட்டு எச்சில் துப்பாதே. அது உன் மீதுதான் படும். உனக்கு சப்போர்ட் பண்ற ரெவன்யூ இன்ஸ்பெக்டரையும்....’ என தரைகுறைவாகப் பேசினார். தொடர்ந்து, “நீ என்ன வானத்துல இருந்து குதிச்சிட்டியா? இதே தாசில்தார் திருநெல்வேலியில இருந்தா தலையை அறுத்து இருப்போம். ஒழுங்கா தலையாரி ட்ரான்ஸ்பர் ஆர்டர கேன்சல் பண்ணலைன்னா உன்னை அசிங்கப்படுத்திடுவோம்” எனக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்

 

அதே வேளையில், சீவலப்பேரி முருகனின் பேச்சு அம்பாசமுத்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய தலையாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுப்பு, செயலாளர் மாரி ராஜா, பொருளாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில், வட்டாட்சியர் சுமதி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சீவலப்பேரி முருகன் மீது மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, பெண் வட்டாட்சியரின் தலையை அறுப்போம் எனத் தலையாரிகள் பேசும் வீடியோ காட்சிகளால் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்