வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று வெகு விமர்சையாக கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கெங்கையம்மன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்ததது. இந்தக் கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழி நெடுங்கிலும் சூரத் தேங்காய் உடைத்தும் சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுபுற கலை நிகழ்சிகளுடன் அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டது.
பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் கண்கள் திறக்கப்பட்டது. கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கெங்கையம்மன் சிரசு விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.