வேலூர் மாவட்டம், ஆண்கள் மத்திய சிறையில் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், சாதியை மையப்படுத்தியும், காவல்துறை யினரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தது சென்னை போலிஸ்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். வேலூர் சிறையில் இருந்த அவர் மீது, ஐபிஎல் போட்டிகளில் கலவரத்தை உருவாக்கியது என அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சிறையில் இருந்தவரை கைது செய்தனர்.
இது தமிழக எடப்பாடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்கள் புலிப்படையை சேர்ந்தவர்கள். இந்த 3 வழக்குகளில் இருந்த பிணை பெற முயற்சி எடுத்தனர். அதன்படி செப்டம்பர் 28ந்தேதி 3 வழக்குகளில் இருந்தும் கருணாஸ்க்கு பிணை கிடைத்தது.
நீதிமன்றம் நிபந்தனை பிணை அளித்ததன் பேரில் இன்று செப்டம்பர் 29ந்தேதி காலை 8 மணியளவில் வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுவிக்கப்பட்டார். காலையிலேயெ சிறை முன் திரண்டுயிருந்த அவரது ஆதரவாளர்கள் கருணாஸ் வெளியே வந்ததும் கைதட்டி ஆராவரம் செய்து, கருணாஸ்க்கு மாலை அணிவித்து அவரை உற்சாகத்துடன் சிறைவாசலில் வரவேற்றனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரு காவல்துறை அதிகாரி தவறு செய்கிறார் என சுட்டிகாட்டி புகார் மனு அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு புகார் செய்த என் மீதே பொய் வழக்குபோட்டு சிறையில் அடைத்தது. என்னை வழிவாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும் நீதிவென்றது எனக்கு ஆதரவளித்தவர்களும் என்னை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். இந்த கைதுக்கெல்லாம் பயப்படமாட்டேன், எந்த வழக்குக்கும் அஞ்சாமல் என் சமுதாய மக்களுக்கு பணியாற்றுவேன். என் மீது எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.
வேலூரில் இருந்து சென்னை புறப்பட்டு செல்லும் கருணாஸ் தினமும் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திடவுள்ளார்.